மும்பை
கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே இரண்டு டோஸ்களாக போடப்படுகின்றன. இதில் கோவாக்சின் தடுப்பூசி 4 வார இடைவெளியில் இரண்டாம் டோஸ் போடலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதே வேளையில் கோவிஷீல்ட் மருந்து இரண்டாம் டோஸ் தற்போது 12-16 வார இடைவெளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே இதனால் கடும் குழப்பம் உண்டாகி இருக்கிறது. இது குறித்து மும்பையை சேர்ந்த தொற்று நோய் நிபுணர்கள் ”2ஆம் டோஸ் தடுப்பூசி நான்கு வார இடைவெளியில் போடுவதன் மூலம், கடுமையான வைரஸ் பாதிப்பிலிருந்து 100% சதவீதம் பாதுகாப்பளிக்கும். அதே வேளையில், குறைவான, நடுத்தரமான கொரோனா பாதிப்பிலிருந்து 100% நம்மைக் காக்காது.
ஆகவே தடுப்பூசி போட்டாலும், லேசான அறிகுறிகளுடன் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால் 12 வார இடைவெளி தரப்படுகிறது. இதனால் 12 வாரத்திற்குப் பிறகு 2வது டோஸ் போடும் போது லேசான பாதிப்பிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் பொறுத்த வரை ஓராண்டு வரை கூட காத்திருக்கலாம். பொதுவாக 4 வார இடைவெளி என்பது பொதுவானது. ஆனால் தடுப்பூசி கிடைக்காத பட்சத்தில் ஓராண்டு வரை கூட காத்திருக்கலாம். அப்போதும் அதன் பாதுகாக்கும் திறன் அப்படியே இருக்கும். ஆகவே முதல் டோஸ் போட்டு ஓராண்டு ஆனாலும் கூட 2வது டோஸ் போடலாம். அப்போது மீண்டும் முதல் டோஸ் போட வேண்டிய அவசியமில்லை.” என தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் ஓராண்டு தாண்டியும் முதல் டோஸ் வீரியமாக இருக்குமா என்பதற்கான ஆய்வு தரவுகள் எதையும் அவர்கள் அளிக்கவில்லை.