சென்னை: புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், முக்கவசம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித தடைகளும் விதிக்காத நிலையில், கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் கூடும் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் முழுவதும் முக கவசம் அணிய வேண்டும் என சிஎம்டிஏ நிர்வாகம் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
அதிகாரிகள், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கியின் மூலமாக முக கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், வியாபாரிகள் சங்கம் மூலம், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், கடைகளுக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. கோயம்பேடு வணிக வளாகம் முழுமைக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், புத்தாண்டு கொண்டாண்டத்துக்கு தமிழகஅரசு எந்தவொரு தடையும் விதிக்கவில்லை. இது வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கடற்கரை உள்பட தனியார் ரிசார் மற்றும் ஓட்டல்கள், மதுபான விடுதிகள், மால்களில் பல லட்சம் பேர் கூடி, புத்தாண்டை கொண்டாடும்போது பரவதாக கொரோனா வியாபாரிகள் மூலம்தான் பரவுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற விஷயங்களில் தமிழகஅரசு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த கொரோனா பரவல் காலக்கட்டத்தில் கோயம்பேடு சந்தை கொரோனா கிளஸ்டராக இருந்ததால், இந்த முறை முன்கூட்டியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.