புனே: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு அபாந்தவனாக இருந்து  பல கோடி மக்களின் உயிர்களை  காப்பாற்றியது. பின்னர் தொற்று பரவல் குறைந்ததும், அந்நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொதுமக்கள் போடுவதற்கு முன்வராததால், அந்நிறுவனம் தயாரித்த சுமார் 10கோடி டோஸ் தடுப்பூசிகள் காலாவதியாகி வீணானது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்ற னர். ஆனால், போதிய அளவுக்கு தடுப்பூசி இல்லாத நிலையில்,  தன்னிடம் ஸ்டாக் உள்ள சுமார் இரண்டு கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குவதாக தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக  சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி,  ரூ. 410 கோடி மதிப்பிலான  சுமார் 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்குவதாக சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இதுவரை 170 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டுகளை தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.