சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணயின்  தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த  3,85,66,027 ஆக உயர்நதுள்ளது.  மரணமடைந்தோர் மொத்தம் 4,88,396 ஆகவும், இதுவரை 3,60,58,806 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தற்போது 20,18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 62,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  பொங்கல் விடுமுறைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற மக்களால், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.  இது வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

தமிழகத்தில் 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் நோய் பரவல் அதிகமாக உள்ள போதிலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

இந்தியாவில் போலியோவே இல்லை என்னும் நிலை உருவாகியுள்ள சூழலில், போலியோ தடுப்பூசி முகாம் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால், எந்தவொரு பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.