தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

Must read

சென்னை:
மிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும் ஒமைக்ரான் தொற்று பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவியுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 38 ஆக உயர்ந்துள்ளது. வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, இரண்டு நாட்களாக தென் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் 5க்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த தொற்று தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தொற்று தொடர்பாக எடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டம் கூடுவதை முடிந்த அளவுக்கு அரசு குறைக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும், பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article