வெளிநாட்டில் இருந்து  ‘கொரோனா.. மீண்டும் புலம்பும் கேரளா’’

‘’இது கவலை அளிக்கிறது’’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துக்கொண்டார், கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன்.

ஆனால் கேரள மக்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் கொடுத்துள்ளது,

இந்த கவலை, அச்சம், அதிர்ச்சி –இதெல்லாம் எதனால்?

பீடிகை போடாமல் நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கிறது, கேரளா.

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்குச் சாரை, சாரையாக வந்திறங்கும் வெளிநாட்டு வாழ் மலையாளிகளால், அந்த முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு ‘வந்தேமாதரம் மிஷன்’’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆம் தேதி ஆட்களை ஏற்றிக்கொண்டு விமானங்கள் வந்திறங்கின.

இரண்டு விமானங்களில் வந்தவர்களில் ஆளுக்கொருவருக்கு கொரோனா  தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அங்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களில் ஒருவர், அபுதாபியில் இருந்து கொச்சி விமானநிலையம் வந்து இறங்கியவர்.இப்போது எர்ணாகுளம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்னொருவர், துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையம் வந்து சேர்ந்தவர். அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விமானம் ஏறும் போதே இவர்களுக்கு கொரோனா தொற்று இருந்திருக்க வேண்டும். அந்த நாட்டு விமான நிலையங்களில், இவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

‘’ இது நாங்கள் எதிர்பார்த்தது தான். (கொரோனாவால் இருவர் இங்கு வந்திருப்பது) எங்களைக் கவலை கொள்ளச்செய்துள்ளது.’’ என்று தெரிவித்துள்ளார், பினராயி விஜயன்.

இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் ‘கல்ஃப்’ நாடுகளில் இருந்து கேரள வந்து கொண்டிருக்கிறார்கள், என்பது கொசுறு தகவல்.

– ஏழுமலை வெங்கடேசன்