சென்னை: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,   சென்னையில் இன்று முதல்  வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்காக  12 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ளது.  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,29,26,061  பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று 3,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிக பட்சமாக சென்னையில்  1,459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் சிகிச்சையில் இருப்போர்  எண்ணிககை 10,685 ஆக உயர்ந்துள்ளது

இதைத்தொடர்ந்து, சென்னையில் நோய் பரவலைத் தடுக்கும் வகையில்  சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் சென்னையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி, “சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அந்த பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாமுக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யயப்படும். இந்த கொரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.