சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தைத் தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது கொரோனாவில் 4வது அலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையிலும், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.