சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.5% ஆக குறைந்ததுள்ளதாகவும், கொரோனா தொற்று  பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் பாராட்டியதை, ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை, இது எதிர்கட்சித் தலைவரின் இயலாமையை காட்டுகிறது என்று  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது,  முதலமைச்சர் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தற்பொழுது தொற்று கண்டறியப்படுபவர்களின் விகிதம் மற்ற மாநிலங்களை விட மிக குறைவாக 3.5 சதவிதமாக உள்ளது. (ஆர்.டி. பிசிஆர் டெஸ்ட், தி கோல்டன் ஸ்டேன்டர்டு டெஸ்ட் பார் கோவிட் டெஸ்டிங்)

தமிழ்நாட்டில் இதுவரை 203 (66 அரசு + 137 தனியார்) பரிசோதனைக் கூடங்கள் மூலம் 1 கோடியே 99 ஆயிரத்து 519 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான நபர்களுக்கு பரிசோதானைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னேறிய நாடுகளான அமெரிக்காவில் கூட ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறுவதற்கு 7 நாட்கள் தேவைப்பட்டது. இது தற்பொழுது 3 நாட்களாக குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தொடக்கத்தில் 24 மணி நேரம் தேவைப்பட்ட நிலையில் தற்பொழுது 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடக்கத்தில் கிங் இன்ஸ்டியூட்டில் ஒரு ஆய்வகம், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை வசதிகள் என தொடங்கப்பட்டு தற்பொழுது 203 ஆய்வகங்கள் 1.39 லட்சம் படுக்கைகள் அமைத்து வரலாற்று சாதனை புரியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் அரசு ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 4.20 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 2.28 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பயனடைந்துள்ளனர். மேலும் பொது சுகாதாரத் துறை சட்டத்தினை கடுமையாக அமல்படுத்தப்பட்டதில் 10.67 லட்சம் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.8 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரால் எடுக்கப்பட்ட உத்திகள், ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள், பிளாஸ்மா தெரபி ஆகியவற்றின் மூலம் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என அரசின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொது சுகாதாரத் துறையின் விதிகளை கடைபிடிப்பது மட்டுமல்லாமல், சுய கட்டுப்பாட்டுடன் கூடிய தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட மக்கள் நல்வாழ்வுத் துறை கேட்டுக் கொள்கிறது.

பிரதமர் பாராட்டு

கொரோன தடுப்பு நடவடிக்கையாக அகில இந்திய அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த முன் முயற்சிகளை பிறமாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனம் திறந்து பாராட்டினார். பொதுமக்களும் பாராட்டுகின்றனர். பாராட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவருக்கு பாராட்டவும் மனதில்லை, பாராட்டுவதை ஏற்றுக் கொள்ளவும் மனதில்லை, பாராட்டுவதை பொறுத்துக் கொள்ளவும் மனதில்லை.

முதலமைச்சர் மாவட்டம்தோறும், நேரில் சென்று ஆய்வு செய்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றுகிறார்கள். அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்களும் கவச உடை அணிந்து நேரில் ஆய்வு செய்து, மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துகிறார்கள். ஆனால் எதிர்கட்சித் தலைவர் கானொலி காட்சி மூலம் கலந்து கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது பொறுத்தமானதாக இல்லை. விமர்சனங்களை தாண்டி அம்மாவின் அரசு மகத்தான சாதனையை புரிந்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவரின் அறிக்கை அவரின் இயலாமையை காட்டுகிறது.

வளர்ந்த நாடுகளில் தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இரண்டாவது அலை வராமல் தடுக்க பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பைஅளிக்க வேண்டும்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப தில் அளித்தவர்,

நவம்பர் 16–ந் தேதி மருத்துவ கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றார். மேலும்,  முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் காரணமாக மேற்படிப்பில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்று வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டில் இருந்து தொடர்ந்து பின்பற்றப்படும்.

முதலமைச்சர் அரசு பள்ளியில் கல்வி பயின்றவர். எனவே அவருக்கு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிரமங்கள் புரியும். எனவேதான் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் முதலமைச்சரின் சிந்தனையில் உதித்த முத்தான திட்டமாகும். இச்சட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் ஏறத்தாழ 304 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு கிட்டும். அரசுப் பள்ளியில் படித்த ஏழை கிராமப்புற மாணவர்கள் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அன்றி தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியும்.

7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர போதுமான அரசு பள்ளி மாணவர்கள் இல்லாத பட்சத்தில் மீதமுள்ள இடங்கள் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும். நவம்பர் 16–ம் தேதி மருத்துவக் கலந்தாய்விற்கான ரேங்க் பட்டியல் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கலந்தாய்வு நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர்  கூறினார்.