சென்னை:
கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துஇருந்தது தெரிய வந்ததைத் தொடடர்ந்து அங்கிருந்து  பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி நடைபெற்று வருவதாக சென்னை மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழகஅரசு மற்றும் மாநகராட்சியின் செயலற்றத்தன்மை  காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் கூடிய மக்கள் கூட்டத்தால், அங்கு கடை நடத்திய வணிகர்கள், பணியாற்றிய தொழிலாளர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது கோயம்பேட்டில் மொத்த விற்பனை கடைகள் 600 மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையில்,  சென்னை கோயம்பேட்டில் 2 மொத்த வியாபாரிகள் உட்பட இன்று மட்டும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கோயம்பேட்டில் மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் அங்கிருந்து சென்ற தொழிலாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்பு மூலம் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி ராதாகிருண்ணன்,  கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகங்கள் பெற்று ஆய்வு செய்து வருகின்றன.கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலா னோருக்கு அறிகுறி இல்லை; பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.