சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான  பெஃப்சியின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளதால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.  கோரோனோ பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றார்கள்.

அந்த வகையில், இன்று(25/05/2021) காலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ( FEFSI) முன்னாள் திரு.மோகன் காந்திராமன் கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மறைந்த மோகன் காந்திராமன் திரையுலகில்வ இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.  1957-இல் வெளிவந்த சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குநராக முதன் முதலாக சேர்க்கப்பட்டார். இப்படம் வெற்றிப்படமானது.

நல்லவன் வாழ்வான் படத்தில் உதவி இயக்குநராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். இந்த படத்தில்தான் (நல்லவன் வாழ்வான் )  கவிஞர் வாலி பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்டார்.  ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ என்ற பாடல்தான் இவரது முதல் பாடல். ஆனந்த பைரவியில் ஆர்.ராமானுஜம் என்னும் புதிய இசை அமைப்பாளரை அறிமுகம் செய்துவைத்தவர் மோகன் காந்திராமன்.

ப.நீலகண்டனுடன் இணைந்து இவர் 18 படங்களில் பணியாற்றியுள்ளார். அவற்றுள் சில. சக்கரவர்த்தி திருமகள், திருடாதே, நல்லவன் வாழ்வான், கொடுத்து வைத்தவள், தேடி வந்த செல்வம், ஆடவந்த தெய்வம், ஆனந்தி, பூம்புகார், பூமாலை.

1994-இல் வெளிவந்த ‘கில்லாடி மாப்பிள்ளை’ என்ற படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக மோகன் காந்திராமன் நடித்துள்ளார்.