சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று (மே 24) முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தமிழகஅரசின் வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்தளர்வுகளற்ற முழு ஊரடங்கு  அமலில் உள்ள நிலையில்,  மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்ச எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது,

‘கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம அளவில் காய்கறிகள்  கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார். குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நேற்று தமிழகம் முழுவதும்  6,297 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்பட்டது.  ஒரே நாளில்  4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,500 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

இன்று இன்று 13 ஆயிரத்து 96 வாகனங்கள் மூலம் கிட்டத்தட்ட 6,500 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சென்னையில் 1,236 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.  பொது முடக்கம் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.

மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அவர்களுக் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும்,  கிராமங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காய்கறிகள், பழங்களின் விலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியைப் போல சென்னையிலும் நடமாடும் வண்டிகளில் விலை பட்டியலுடன் காய்கறி விற்பனை செய்யப்படுமா?