சென்னை: சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 சிங்கங்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மக்களை மட்டுமின்றி வனவிலங்குகளை தாக்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா வன உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில், அனைத்து சிங்கங்களுங்ககும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் 9 வயதான நீலா என்ற சிங்கம் உயிரிழந்தது. மேலும், சோதனையில்  9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, பத்மநாபன் என்ற ஆண் சிங்கமும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்தது .

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த 4 சிங்கங்களுக்கும் இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் கொரோனா இருப்பது உறுதியாகியிருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.  தமிழ் நாட்டில் சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றார். மேலும் வண்டலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, வனவிலங்குகளுக்கு கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், 6 பேர் கொண்ட மாநில அளவிலான பணிக்குழுவை நியமித்து வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.  இந்த குழுவில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரினக் காப்பாளர், காலநிலை மாற்றத்துக்கான சிறப்புச் செயலாளர், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சுந்தர் ராஜூ மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் தியோடர் பாஸ்கரன் இடம்பிடித்துள்ளனர். இந்த குழு தடுப்பூசி பணிகளை கண்காணித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும்.