சென்னை:  தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே வாரத்தில் சுமார் 7ஆயிரம் மாணாக்கர்கள் புதியதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.  தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜூன் 14ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தற்போது 2021-22ம் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை  தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. மேலும் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

6, 9-ம் வகுப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் முன்னதாக தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு, புதிதாக பள்ளிகளுக்கு பெற்றோருடன் வந்து சேர்ந்து வருகின்றனர். மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், கொரோனா பரவல் குறையாத மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

இந்த நிலையில், நடப்பாண்டில் கடந்த ஒரு வாரத்தில் 7000 பேர் [பதியதாக சேர்ந்துள்ளதாகவும், கடந்த 2 வருடங்களாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை உயரும் என்று  ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்டங்களும், இலவச கணினி, டேப்லெட், நீட் கோச், மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு போன்ற அரசு அறிவிக்கும் சலுகைகளும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை நாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.