சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைந்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை அரசுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் 2 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நோயாளிகள் எளிதாக கண்டறியயப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயனாக தற்போது தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் தடுப்பு பணிகளை விரிவுபடுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் இந்த குழுவிற்கு தலைமை தங்குகிறார். கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்யக்கூடிய வகையில் இந்த குழு துவங்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப இந்த குழுவின் உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் இல்லாத நான்கு மருத்துவர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்பட 9 பேரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சுகானந்தம், குழந்தைசாமி, மனோஜ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு அரசுக்கு ஆலோசனை வழங்குவதுடன் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து கண்காணித்து தேவையான தகவல்களை தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.