டெல்லி: இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க மத்திய அரசு தயாராக  இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக  தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளது. மேலும், , பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும், மருந்துகளுக்கும்  தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நிலைமை மோசமாகியுள்ளது. ‘

உயிரிழப்பவர்களை புதைக்க இடமில்லாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல மயானங்களில் டோக்கன் போட்டு உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் அவலம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று 25 நோயாளிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இன்று மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  நூற்றுக்கணக்கான  நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, மத்திய அரசு தேவையற்ற திட்டங்களுக்கு செலவிடும் தொகையை நிறுத்தி சுகாதாரத்துறைக்கு செலவிடலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்,

‘மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அந்த தொகையை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கலாம்.

இனி வரும் நாட்களில் கொரோனாவால் சிக்கல் இன்னும் தீவிரமாகும். அதை சமாளிக்க தேசம் தயாராக இருக்க வேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலை தாங்கிக்கொள்ள முடியாதது’

என்று குறிப்பிட்டுள்ளார்.