டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை பார்க்கும்போது, கொரோனா தொற்றின் 4வது அலை தொடங்கி இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் நிலவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 17,336 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் நேற்று 12,249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 17,336 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் சுமார் 5ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகரித்து பரவலை பார்க்கும்போது, கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், உலக சுகாதார அமைப்பு பிப்ரவரி மாதம் கூறியது நினைவுக்கு வருகிறது.
கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கடந்த கொரோனா அலையின் போது கணித்த கணிப்பு ஓரளவுக்கு சரியாகவே இருந்துள்ளது. இதனால், தற்போதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியின் கணிப்பை மெய்ப்பிக்கும் வகையிலேயே இருக்கிறது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 17,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,33,62,294-ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,954 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 13,0290 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,27,25,055-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 88,284 போ் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,96,77,33,217 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 13,71,107 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் மீண்டும் கொரோனா அலை : கான்பூர் ஐஐடி கணிப்பு
ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு