த்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தொடர்வதால் பட வெளியீட்டை அதன் தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்தித்   திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். வரலாற்றுத் திரைப்படமான இதில், ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும்,  ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர்.

ராஜஸ்தானில் 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது பத்மாவதி படத்தின் கதை. டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது ஆசைகொண்டு படை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்படம் வெளியாவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இப்படத்தை எதிர்க்கும் பிராமண அமைப்பான கார்னி சேனா அமைப்பு பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ‘பொதுவாக நாங்கள் பெண்களை அடிக்கமாட்டோம். ஆனால், தேவைப்பட்டால் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று அந்த அமைப்பின் தலைவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும், மற்றொரு பிராமண அமைப்பு படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி ரத்தக்கறை பட்ட கடிதத்தை திரைப்பட தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதனால், தீபிகா படுகோனேவுக்கு சிறப்புப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உ.பி. முதல்வரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. படத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து,  வரும் டிசம்பர் 1ஆம் தேதி பத்மாவதி வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஆனால், படத்திற்கு எதிர்ப்பு வலுத்துவருவதால் படத்தை அறிவித்தபடி வெளியிட  முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, படத்தைத் தயாரித்திருக்கும் “வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ்” நிறுவனம் தெரிவித்துள்ளது.