சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 13ந்தேதி சென்னை வருகிறார். அன்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் கார்கே, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையிடம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் தொடர்பாக குழுக்களை அமைத்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. திமுக சார்பில் ஒருபுறம் கூட்டணி கட்சிகளிடம் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தைகளை தொடங்கி உள்ள நிலையில், மற்றொருபுறம் மாவட்ட தலைவர்களை அழைத்து தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகிறது.
இதந்த நிலையில், திமுக காங்கிரஸ் இடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக ஜனவரி 28ந்தேதி பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு , ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்றது என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினாலும், பேச்சு வார்த்தை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
மேலும் முதல்கட்ட பேச்சுவார்த்தையும் இரு கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், வரும் 9ந்தேதி (பிப்ரவரி) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இநத் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீரென தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 13-ந் தேதி கார்கே சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்து உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்றும், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார மற்றும் பூத் கமிட்டிகள் வரையிலான நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் முதல்கட்டமாக பேசி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை திமுக வழங்க மறுத்து வருவதுடன், சிவகங்கை உள்பட காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதிகளை மீண்டும் ஒதுக்க திமுக மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்த முறை, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட குறைந்த தொகுதிகளையே ஒதுக்க முயற்சிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நேரடியாக களமிறங்கி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை ஒதுக்கும்படி வலியுறுத்துவார் என்றும், அதைத்தொடர்ந்து, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால் கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் சத்தியமூர்த்தி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குமா திமுக….?