திருப்பூர்: தட்சிண காசி என அழைக்கப்படும், புகழ்பெற்ற திருப்பூர் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடெபற்றது.  அதுபோல திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலிலும் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில்  பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்   கலந்துகொண்டு குடமுழுக்கை தரிசித்து  சிவனின் ஆசி பெற்றனர்.

கொங்கு  மண்டலங்களில் உள்ள ஏழு சிவாலயங்களில் முதன்மையாகக் கொண்டதும் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே  கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். காசியின் ஒரு கிளையாகக் கருதப்படும் அவிநாசிதட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசி சிவபெருமானின் அருள், அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்ற திருத்தலம். பிரம்மோற்சவ காலத்தின்போது மட்டுமே பூக்கும் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரம், மற்றுமொரு அதிசயம்.

அதுபோல தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோவில்கள் இன்று  கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக,  அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 29ந்தேதி)  79 குண்டங்கள் நூறு சிவாச்சாரியார்கள் கொண்டு வேள்வி யாகம் தொடங்கியது. இதை தொடர்ந்து  நேற்று (பிப்ரவரி 1ந்தேதி)  அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கொடிமரம், மற்றும் பரிவார தெய்வங்களான கனக சபை, பாலதண்டாயுதபாணி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் தீர்த்த கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து,  போல நாராசா வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று  காலை 9.15 – 10.15 மணிக்கு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரங்கள், அவிநாசி லிங்கேஸ்வரர் சன்னதி, கருணாம்பிகை யம்மன் சன்னதி மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர் சன்னதி ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம்  வெகு விமரிசையாக நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ், மற்றும் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் நன்கொடையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் பிரம்மாண்டமாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு அனுமதி பெறுதல் மற்றும் ஆனைமுகத்தோன் வேள்வியுடன் துவங்கியது. கைலாயம் போல் காட்சியளிக்கும் பிரம்மாண்ட யாக சாலையில் 79 குண்டங்கள் அமைக்கப்பட்டு நூறு சிவாச்சாரியார்கள் கொண்டு ஜனவரி 29-ம் தேதி துவங்கிய முதல் கால வேள்விப்பூஜை அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முதல் ஏழு வரை நாளொன்றுக்கு இரண்டு கால வேள்விப்பூஜை என நேற்று இரவு வரை ஏழு கால வேள்விப் பூஜைகள் நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலமாக ராஜகோபுரங்களுக்கு மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டது.

அதுபோல திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலிலும் இன்று குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆதினங்கள், எம்எல்ஏக்கள் வருகை தந்து கும்பாபிஷேக நிகழ்வுகளை தரிசித்தி , சிவனின் அருளை பெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில்,  அதிக அளவிலான விஐபிக்களும் வருகை தந்ததால்,  காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

கும்பாபிஷேகத்தை காணும் வகையில்,  விழா நடைபெறும் மாவட்டங்களில்  இன்று அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வுகளை கண்டுகளித்து சிவனின் அருளை பெற்றனர்.  கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.