டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று  மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மா  மீண்டும்  பொறுப்பேற்றார். அதுபோல, நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு  தேர்தல் அறிவிக்கப் பட்டது. மேகாலயாவில்   59 தொகுதிகளுக்கு மட்டுமே பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மார்ச் 2ந்தேதி வாக்கு எண்ணப்பட்டது. இதில்,  தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தல 5 இடங்களில் வெற்றி பெற்றது. பிறகட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றனர்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி பாஜகவிடம் தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கியது. இந்த நிலையில் மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும் முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில் இன்று சில்லாங்கில் கான்ரார்ட் சங்மா முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளரும் அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

கான்ரார்ட் சங்மா அமைச்சரவையில்,  இரண்டு துணை முதலமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்களுக்கு மேகாலயா ஆளுநர் பாகு சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கான்ரார்ட் சங்கமா முதலமைச்சராகவும், டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் பாஜகவின் ஏஎல் ஹெக் இடம்பெற்றுள்ளார்.

அதுபோல  நாகாலாந்து  மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்றார்.  நெய்பியு ரியோவிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நாகாலாந்து மாநிலத்தில் தொடர்ந்து 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராகப் பதவியேற்றுள்ளார். நாகாலாந்து தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் இரு கட்சிகளும் 37 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்றன.