ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் 1174 இடங்களிலும் பாஜக 1123 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த வியாழன் அன்று ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடந்தது.  இதில் அஜ்மீர், பன்ஸ்வாரா, பிகானேர், பூண்டி, பிரதாப்கர், சித்தூர்கர், சுரு, துங்கர்பூர், ஹனுமன்கர், ஜெய்சலமார், ஜலூர், ஜுன், நாகவுர், ராஜூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.   மொத்தம் 3035 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டுள்ளது.  இதுவரை 2975 வார்டுகளுக்கான முடிவுகள் வந்துள்ளன.  மாலை 4.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 1174 வார்டுகளிலும், பாஜக 1123 வார்டுகளிலும் வென்றுள்ளது.  அதாவது பாஜகவை விட காங்கிரஸ் அதிக அளவில் வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதைத் தவிரச் சுயேச்சைகள் 615 வார்டுகள், தேசியவாத காங்கிரஸ் 46 வார்டுகள், ஆர் எல் பி 13 வார்டுகள்,  சிபிஎம் 3 மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி 1 வார்டு என வெற்றி பெற்றுள்ளன.  இன்னும் 60 வார்டுகளுக்கான முடிவுகள் வரவேண்டி உள்ளன.