சென்னை:

காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அக்கட்சியின் 8 எம்எல்ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக.வும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து வாக்களிப்பதால் எடப்பாடி ஆட்சி தப்புவது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

பன்னீர் செல்வதுக்கு ஆதரவாக 11 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். திமுக.வின் 88 எம்எல்ஏ.க்களும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வர இயலாது. அதே சமயம் கூவத்தூரில் எம்எல்ஏ.க்களில் 18 பேர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் முதல்வரும், சசிகலா தரப்பும் தீவிரம் காட்டி வருகிறது. எனினும் தற்போதைய நிலவரப்படி 107 எம்எல்ஏ.க்கள் எதிர்த்து வாக்களிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக.வும், காங்கிரசும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருப்பதால் எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.