ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது ‘ஒரு நபர் ஒரு பதவி’ கொள்கையை அமலாக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.   அம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்து நேற்று டில்லி சென்ற முதல்வர் அசோக் கெலாத் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.   அசோக் கெலாத் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அசோக் கெலாத், “அமைச்சரவை மாற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.  ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நான் தலைமையிடம் விவரித்துள்ளேன்.  தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது காங்கிரஸ் கட்சி ’ஒரு நபர் ஒரு பதவி’ என்னும் கொள்கையை அமலாக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  ஏற்கனவே ரகு சர்மா, கோவிந்த் தோதசாரா, மற்றும் ஹரீஷ் சவுத்ரி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சி பணிகள் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் கல்வி அமைச்சர் கோவிந்த் தோதசாரா ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகப் பதவி வகிக்கிறார். சுகாதார அமைச்சர் ரகு சர்மா குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் வருவாய் அமைச்சர் ஹரீஷ் சவுத்ரி பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றனர்.