நரேந்திர மோடி பயோபிக் படத்தை தடை செய்ய காங்கிரஸ் கோரிக்கை

னாஜி

தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் பயோபிக் படத்தை தடை செய்யக் கோரி கோவா மாநில காங்கிரஸ் மாணவர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.  இதை ஒட்டி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் முடிவடையும் தேதியாக ஏப்ரல் 12 அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் அன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவு பெறுகிறது. அதற்கு பிறகு வேட்பாளர்கள் எவ்விதத்திலும் பிரசாரம் செய்ய தடை உள்ளது.  பிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதை படமாக்கப்பட்டுள்ளது. இதில் போமன் இராணி மற்றும் விவேக் ஓபராய் முக்கிய வேடங்களில் நடித்துளனர். ஓமங் குமார் இயக்கிய இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நாடெங்கும் வெளியாக உள்ளது.

இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம், “பிரதமர் மோடியின் பயோ பிக் தேர்தல் பிரசாரம் முடிவடையும் தினத்தில் வெளியாகிறது. இது அமைதி காக்கும் நேரம் என்பதால் இந்த படத்தை திரையரங்குகளில் தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும்.

அத்துடன் நாங்கள் இந்த திரைப்படம் மோடிக்கு ஆதரவாக உள்ளதால் இது மோடியின் தேர்தல் பிரசாரப் படம் எனவே கருதுகிறோம். ஆகவே தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு இணங்க இந்த படத்தின் செலவை மோடியின் தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Congres urges to ban, election commission, Modi biopic
-=-