டில்லி

பாஜகவின் அரசியலே மணிப்பூர் கலவரத்துக்குக் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது..

கடந்த சில நாட்களாக மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே இருந்த மோதல், நேற்று  திடீரென அதிகரித்தது. நேற்று பழங்குடி ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றதை அடுத்து, மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.  இந்த மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பணிகளைக் காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப்பிரிவும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இந்த மோதலுக்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

“இப்போது மணிப்பூர் பற்றி எரிகிறது.  மிகவும் அழகான அந்த மாநிலத்தில் பாஜக சமூகங்களுக்கு இடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி, அமைதியை அழித்து விட்டது.  மக்களிடையே பாஜகவின் வெறுப்பூட்டும் பேச்சு பிளவுகளை ஏற்படுத்தும் செயல்பாடு, அதிகாரத்தின் மீது அக்கட்சிக்கு இருக்கும் பேராசை ஆகியவையே இதற்குக் காரணம். அங்கு அமைதியைக் கடைப்பிடிக்குமாறு மக்களைக் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது”

என்று தெரிவித்துள்ளார்.

தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள டிவிட்டர் பதிவில்,

“பிரதமர் மோடி மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாநிலம் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அங்குள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.