டில்லி

த்திய அரசு மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாகப் பலர் உயிரிழந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு மோதல் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழுவினர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று சந்தித்து 4 பக்க மனுவை அளித்துள்ளனர்.

அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்,

”கடந்த 2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாகாலாந்தில் துரதிருஷ்டவசமாக இரண்டு மிகப் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எட்டப்பட்ட தீர்வு என்பது நாகாலாந்துக்கு மட்டுமே என்பதாக இருந்தது. ஆனால், அண்டை மாநிலமான மணிப்பூர் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு அப்போது முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது, மணிப்பூர் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், மணிப்பூரிலும் கலவரம் ஏற்பட்டது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரில் மீண்டும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. மணிப்பூரில் நிலவும் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கிலேயே குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். அவரும், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.