ண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த 23 ஆம் தேதி அன்று கள்ள வாக்குகள் பதிவு செய்யபட்டதாக காங்கிரஸ் வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் கடந்த 23 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடந்தது.    இந்த வாக்குப்பதிவில் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல முறைகேடுகளை நிகழ்த்தியதாக புகார்கள்  எழுந்தன.    குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன.

கேரளாவில் இம்முறை கண்ணூர் தொகுதியி 83.05% வாக்குகள் பதிவாகி உள்ளன.   இதற்கு காரணம் கள்ள வாக்குகள் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.   அக்கட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் கண்ணூரில் உள்ள 19 ஆம் எண் வாக்குச்சாவடியில் ஒரு பெண் தேன் கலரில் புடவையும், பச்சை ரவிக்கையும் அணிந்து வந்து வாக்குப் பதிகிறார்.

அதன் பிறகு அதே பெண் மீண்டும் சில நிமிடங்கள் கழித்து வரிசையில் வந்து வாக்குப்பதிவு செய்கிறார்.   அது மட்டுமின்றி அவர் விரலில் வைக்கப்பட்ட அடையாள மையை விநாடி நேரத்துக்குள் அழித்துள்ள காட்சியும் பதிவாகி உள்ளது.  மற்றொரு வீடியோவில் நீல நிற துப்பட்டா அணிந்த ஒரு பெண் வரிசையில் நிற்கும் ஒருவருக்கு அடையாள அட்டை அளிக்கும் காட்சி பதிவாகி உள்ளது.

இதைப் போல சுமார் 6 பேர் கள்ள வாக்கு அளித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.    கண்ணூர் மாவட்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, தேர்தல் அதிகாரிகள் மற்ரும் காவல் துறையினர் உதவியுடன் பல வாக்காளர்கள் அடையாள அட்டை ஏதுமின்றி வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=NMwYKOQJR5k]

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான தேசாபிமானி  அந்த பெண்மணி கள்ள வாக்கு அளிக்கவில்லை எனவும் அவர் மாற்று வாக்கு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.   மாநிலங்களவை தேர்தல் சமயத்தில் ஒரு உறுப்பினரால் வாக்களிக்க வர முடியவில்லை எனில் அவர் மற்றொரு உறுப்பினருக்கு தனக்கு பதில் வாக்களிக்க அங்கீகாரம் அளித்து வாக்களிக்க செய்வதே மாற்று வாக்கு ஆகும்.

ஆனால் இந்திய தேர்தல் சட்டப்படி மக்களவை தேர்தலில் மாற்று வாக்கு அளிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.