காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

உ.பி. மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்கள் வழியாக சுமார் 11 நாட்கள் பயணம் செய்யும் வகையில் இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் முன்னதாக 7 செப்டம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை நடைபெற்ற ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் இரண்டாம் கட்டமாக தற்போது ‘பாரத் நியாய யாத்திரை’ மேற்கொள்ளப்படுகிறது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து ஜனவரி 14ம் தேதி துவங்க உள்ள இந்த யாத்திரை 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 66 நாட்களில் 6700 கி.மீ. தூரம் பயணித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிறைவடையும்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை பேருந்து மற்றும் நடைபயணம் இரண்டும் சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் 11 நாட்கள் பயணம் செய்யும் ராகுல் காந்தி உ.பி.யின் சந்தௌலி, வாரணாசி, பதோஹி, அலகாபாத், பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ, சீதாபூர், லக்கிம்பூர், ஷாஜஹான்பூர், பரேலி, ராம்பூர், மொராதாபாத், மீரட், அலிகார், மதுரா, ஆக்ரா, காஸ்கஞ்ச் ஆகிய இடங்கள் வழியாக 1074 கி.மீ. பயணிக்க உள்ளார்.

உ.பி தவிர, மணிப்பூர், நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த யாத்திரை செல்லும்.

இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய இந்தப் பயணத்தின் மூலம், ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.