டெல்லி; சீனர்களுக்கு முறைகேடா விசா பெற்றுதர ரூ.50லட்சம் லஞ்சம்  பெற்றதாக சிபிஐ  பதிவு செய்துள்ள வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்க,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும், அவரது நிறுவனம் மீதும் பல்வேறு புகார்கள் உள்ளன. இது தொடர் பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ஏற்கனவே,  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற்றது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 2018-ம் ஆண்டும், ப.சிதம்பரம் 2019-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர். வழக்கு விசாரணை  நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த 2009-2014-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கிய தில் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம்மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் 3 இடங்களிலும் மும்பையில் 2 இடங்களிலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு, அலுவலகத்திலும் கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், சீனர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான  ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்  சார்பில், டெல்லி நீதி மன்றத் தில் முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் விசாரிக்கப்படும் என தெரிகிறது.