சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்தார்.

சென்னை ஐசிஎஃப்பில் உள்ள,  பெரம்பூர்-இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில், ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’  என்ற பெயரில் ரூ.97கோடி செலவில் முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் அதிநவீன சொகுசு  விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஐசிஎஃப் வந்து ஆய்வு செய்தார். ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு சென்று ரயில் பெட்டி தயாரிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்ததார். பின்னர்,  செய்தியாளர்களை  சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது,

நமது பாரத பிரதமர் மோடியின்  நோக்கம் இந்திய ரயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான். சென்னை ஐசிஎஃப்  இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது நமக்கு பெருமை என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரயில்கள், நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் என்றார்.

தமிழகத்தில் எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் மேம்படுத்தபட இருப்பதாக கூறியவர்,  தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் வெளி மாநலி ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில மொழி கற்க வேண்டும். மொழி தெரியாமல் உள்ளதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.