கரூர்: மக்கள் பணி செய்யவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னந்தனியாக அமர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி போராட்டம் நடத்தினார். ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், மாநில அரசு நியமித்துள்ள ஆட்சித்தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து , கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளதாக தெரிவித்தார். அவருக்கு துணையாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் குரல் கொடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆக்டிவாக செயல்படுபவர். இவர் மத்தியஅரசின் திட்டங்களை கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், அதற்கு மாவட்ட ஆட்சியர், ஆளும் கட்சியினரின் அறிவுறுத்தலின்பேரில் தடை போடுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. அங்கு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நிவாரணங்கள் வழங்கப்பட்ட நிலையில், மேலும் சில மாவட்டங்களிலும் இதுபோல முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கரூரில் முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்து வருகிறார். இதையடுத்து, மாற்றுத்திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க உடனடியாக முகாம் நடத்த கோரி காங்கிரஸ் எம்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட ஆட்சியரிடம் அவர் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைடுத்து,ஆட்சியர் அலுவலகத்தில் தன்னந்தனியாக அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய ஜோதிமணி கூறியதாவது, கரூர் பாராளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகவும், மேலும் மற்ற மாவட்டங்களில் திமுக எம்பி கனிமொழி இருந்த அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது.
ஆனால் கரூர் மாவட்டத்தில் கமிசன் நோக்கத்திற்காக மட்டுமே, இந்த திட்டம் மூலமாக பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கிடைக்கவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கரூர் எம்.பி. நேரடியாக குற்றம்சாட்டிவர், மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது? இந்த சிறப்பு முகாம் நடத்த கோரி கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை.
ஆட்சியாளர்கள் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட ஆட்சியர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தடுத்து வருவதாகவும் உடனடியாக இந்த சிறப்பு முகாம் எப்போது நடத்தப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே இந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவேன் எனக் கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஈடுபட்டார்.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று குற்றம் சாட்டிய ஜோதிமணி, தற்போதும் ஊழல் நடைபெற்று வருகிறது எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலின்போதும், சட்டமன்ற தேர்தரின்போது, கரூர் தொகுதி உள்பட பல தொகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுக, காங்கிரஸ் வெற்றிக்கு சிறப்பாக பணியாற்றியவர் ஜோதிமணி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.