சென்னை
தமிழக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் வரும் சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் தேவை என வலியுறுத்தி உள்ளனர்.
தற்போதுதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் கிராம கமிட்டிகளை அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
அவர், எம்.எல்.ஏ.க்கள், அணி நிர்வாகிகள், கட்சி மாநில நிர்வாகிகளிடம் தனித்தனியாக நடத்திய ஆலோசனை கூட்டங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, கிராம நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலானா, ராதாகிருஷ்ணன், மாங்குடி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், எஸ்.சி.துறை மாநில தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சிலர், 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கும், கூடுதல் எண்ணிக்கையில் இடம் கேட்பதற்கும் வாய்ப்பு உள்ளதால் குறைந்தபட்சம் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட 41 இடங்களிலாவது கண்டிப்பாக போட்டியிட வேண்டும்” என்றும வலியுறுத்தி உள்ளனர்.
அணித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய சிலர் 2026-சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவதுடன், ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கு மட்டும் இடம் கொடுக்காமல் புதியவர்களுக்கும் எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.