டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய  தீர்ப்பை எதிர்த்து உ.பி. மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில்  மறு ஆய்வு  மனு  தாக்கல் செய்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு, பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வந்து உடனே அமல்படுத்தியது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் ஒதுக்கிடு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள்  10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் உத்தரவிட்டது. மேலும்,  இந்த இட ஒதுக்கீடு பாகுபாடற்றவை என்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் 50 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அளவை இச்சட்டம் மீறவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி, பாஜக போன்ற சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. ஆனால், தமிழகத்தில் திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக, திமுக, வி.சி.க உள்பட சில கட்சிகள் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், 10 சதவிகித இட ஒதுக்கீடு  தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு தாக்கல் செய்துள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு – திமுக கடும் எதிர்ப்பு…