டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளியிடப் பட்டது. அதில், தமிழகத்தின் கோரிக்கையான  நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது.

தேர்தல் அறிக்கை குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,   தேர்தல் அறிக்கை உண்மையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்” என்று தெரிவித்திருந்தார்.

தேர்தல் அறிக்கையில்,  குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளுக்கு என பல்வேறு நலத்திட்டங்கள், கடன் தள்ளுபடி உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. விவசாயத்துக்கு என  கிஷான் பட்ஜெட் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல பெண்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காணலாம்…

விவசாயிகளுக்கும் , வேளாண் தொழிலாளர்களுக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் வாக்குறுதிகள் என்ன?

விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு கடனிலிருந்து முற்றிலுமாக விடுதலை என்கிற முக்கியமான வாக்குறுதியை அளிக்கிறது.

விவசாய கடன் தள்ளுபடி, இது கடனிலிருந்து விடுதலை நோக்கிய முதல் படி.

விவசாயப் பொருட்களுக்கான லாபகரமான விலை

விவசாயிகளுக்கு பயன் அளிக்கக் கூடிய பயிர் காப்பீட்டுத் திட்டம் ( தனியார் நிறுவன காப்பீடு அல்ல)

விவசாயம் குறித்த அறிவுரைகளை அரசாங்கத்திற்கு வழங்க ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

விவசாயிகள் நலம் சார்ந்த மற்றும் சந்தை தொடர்புடைய பிரச்சனைகளை கலைய, வர்த்தகக் கொள்கைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெண்களுக்கு  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது என்ன வாக்குறுதிகளைத் தருகிறது?

பெண்களுக்கான பாதுகாப்பு, சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி மற்றும் சமப் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.   அதன் மூலம் பெண்களுக்கான உரிய அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.

17-ஆவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

நீதித் துறையில் பெண்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம்.

அரசாங்க வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு

சம ஊதிய சட்டம் 1976 திருத்தப்பட்டு, பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்க வழிவகை செய்யப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி அமைப்பு.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு , சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தனி விடுதிகள் அமைத்துத் தரப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் விரிவாக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப மழலையர் காப்பகங்கள் அங்கன்வாடி மையங்களில் அமைக்கப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது