டெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கொரோனா 2வது அலை பரவலில் தலைநகர் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. இதற்கு கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசின் மெத்தனமான நடவடிக்கை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததாலேயே இதுபோன்ற அவலங்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடுமையான மாசுபாடு காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வரும் டெல்லி மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் ஆலைகளை அமைப்பதில் கெஜ்ரிவால் அரசு  ஆர்வம் காட்டாத நிலையில், தற்போது அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால் கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள் மரணித்து வருகின்றனர். அவர்களின் உடல்களை எரியூட்டவும் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரிசையில்  காத்துக்கிட வேண்டிய அவலங்களும் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில், மாநில ஆம்ஆத்மி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.