பெங்களூரு:

ஊழல் மூலம் கிடைத்த ரூ. 4 கோடியை கணக்கில் கொண்டு வராத எடியூரப்பாவுக்கு வருமான வரித் துறை ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டதற்கான ஆவணங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பாவுக்கு 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வருமான வரித் துறை ரூ. 2 கோடிக்கு மேலான தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

அப்பர் பத்ரா திட்டத்தை செயல்படுத்தும் டெண்டர் உரிமையை ஆர்என்எஸ் குழுமத்தை சேர்ந்த முருதீஸ்வர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பெறப்பட்ட ரூ. 4 கோடியை அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா கணக்கில் கொண்டு வரவில்லை என்பது இது தொடர்பான வருமான வரித் துறையின் விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான 2016ம் ஆண்டு மார்ச் 28ம் தேதியிலான வருமான வரித் துறையின் உத்தரவு ஆவணங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் உக்ரப்பா கூறுகையில்,‘‘மோடியும், அமித்ஷாவும் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று நான் கேட்கிறேன். சுய மோட்டோவாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை அவர்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் எடியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்வோம்’’ என்றார்.