25 வயது வாலிபருக்கு காதல் வலை வீசிய பாஜக மூத்த தலைவர் : காங்கிரஸ் புகார்

Must read

ஜ்ஜையினி

த்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் பிரதீப் ஜோஷி தனது கட்சியின் 25 வயது ஆண் தொண்டருக்கு தகாத குறும் செய்திகள் அனுப்பியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினி நகர் பாஜக பிரிவு காரியதரிசியாக 55 வயதாகும் பிரதீப் ஜோஷி பதவி வகித்து வருகிறார்.   அவர் தனது கட்சியின் இளம் தொண்டரான இந்தூரை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கு தகாத முறையில் சமூக வலை தளம் மூலம் குறும் செய்திகள் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.   இந்த செய்திகள் வைரலானதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் செயலர் ராகேஷ் சிங் யாதவ் செய்தியாளர்களிடம், “ஒரு வாலிபருக்கு  பிரதீப் ஜோஷி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.  கடந்த 20 நாட்களாக இவ்வாறு தவறான குறும் செய்திகளை ஜோஷி அனுப்பி வருகிறார்.  ஆனால் தனது செயல் வெளியில் தெரியக் கூடாது என அவர் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

இந்த வாலிபர் திடீரென காணாமல் போனதால் அவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்னும் பயம் தோன்றுகிறது.   எங்களுக்கு தெரிந்தவரை அந்த வாலிபர் ஜோஷியை பற்றி வெளியில் சொல்ல முடிவு செய்து இந்த செய்திகளை வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு அவர் காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது.   அந்த இளைஞர் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதால் உஜ்ஜையினி காவல்துறை உடனடியாக அவரை கண்டு பிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்தி தொட்ர்பாளர் உமேஷ் சர்மா, “அரசியல் நோக்கத்துடன் காங்கிரஸ் இவ்வாறு கூறி வருகிறது.  இது குறித்து செய்திகள் வந்ததும் ஜோஷியை கட்சி பதவி நீக்கம் செய்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

உஜ்ஜையினி காவல்துறையினர் தங்களுக்கு ஜோஷியின் குறும் செய்திகள், மற்றும் வாலிபர் காணாமல் போனது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.  மேலும் இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் வாலிபர் யார் என்பதே தெரியவில்லை எனவும் கூறி உள்ளனர்.

பாஜக தலைவர் பிரதீப் ஜோஷி இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

More articles

Latest article