புதுடெல்லி:

வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை பெட்ரோல், டீஸல் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சூரஜ்வாலா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களவை தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.23-ம் தேதி வரை பெட்ரோல், டீஸல் விலையை ஏற்ற வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்குகள் எண்ணி முடிந்ததும் பெட்ரோல், டீஸல் விலையை லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ.10 வரை உயர்த்தவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
நாட்டின் எண்ணெய் தேவை மற்றும் பாதுகாப்பு விசயத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்.

தேர்தல் முடியும் வரை அவர் வாய் திறக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகளுக்கு அனுமதி நீட்டிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.