புதுடெல்லி:

பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க ஒடிசாவில் இடதுசாரிகள் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 3 மக்களவை தொகுதிகளை விட்டுத் தர அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

நரசிங்க மிஸ்ரா.

எதிர்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க மாநில கட்சிகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் மக்களவை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அஸ்கா தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும்,மாயூர்பஞ்ச் தொகுதியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் விட்டுத்தர முடிவு செய்துள்ளது.

அவ்வாறு ஒதுக்கப்பட்டால், புவனேஸ்வர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஜனார்தன் பட்டியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் மகள் அஞ்சலி சோரன் மாயூர் பஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுவார்கள்என்று தெரிகிறது.

தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாவிட்டாலும், பேச்சுவார்த்தை ஏற்கெனவே முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இறுதிகட்ட பேச்சுவார்த்தையின்போது, தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

அம்மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது. இதற்கான தொகுதி பங்கீடு குறித்துப் பேச காங்கிரஸ் மூத்த தலைவர் நரசிங்க மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.