திருவனந்தபுரம்:

வெளிநாட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தால்தான் மோடி வருத்தம் தெரிவிப்பார்? தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு வருத்தம் தெரிவிக்க மாட்டாரா என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் காட்டமாக கேள்வி விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் 13 அப்பாவி பொதுமக்கள் காவல்துறையினரின் காட்டுமிராட்டித்தனதால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடிய சம்பவத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி இதுவரை எந்தவித வருத்தமோ, பதிலோ தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்  சசிதரூர்

மோடியின் மவுனம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதருர் மோடியின் பாராமுகம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி உள்ளார்.

அதில், அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடுக்கு மோடி  அதிர்ச்சி தெரிவித்த செய்திகளை வெளியிட்டு,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மவுனமாக இருப்பது ஏன்?  வெளிநாட்டில் துப்பாக்கி சூடு நடந்தால்தான் மோடி வருத்தம் தெரிவிப்பாரா? என்று  காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

மோடி,  அமெரிக்காவின் ஒர்லான்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, ‘ஒர்லான்டோ துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்து அதிர்ச்சிடைந்தேன். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும், வேண்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று டுவிட்டரில்  கூறியிருந்தார்.

இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் 13 இந்தியர்கள் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, மோடி பேசாமல் இருப்பதாக கூறி கருத்து படம் வெளியிடப்பட்ட மீம்ஸை ஷேர் செய்துள்ளார் சசிதரூர்.