டில்லி

ந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றி தெரிவித்த கருத்தால் பாகிஸ்தான் தளபதி ஆசிஃப் கஃபூர் ஆத்திரமாக பதில் அளித்துள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளின் இந்தியா பாகிஸ்தான் லீக் ஆட்டம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றிக்கு உலகெங்கும் இருந்து பல ரசிகர்கள் இந்திய அணிக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீவிரவாதம், அரசியல் போன்ற சர்ச்சை இருப்பினும் விளையாட்டு விஷயமாக ஒரு ஒற்றுமை நிலவி வந்தது. இந்த போட்டியின் போதும் பல பாகிஸ்தானிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை பாராட்டிஉள்ளனர். அத்துடன் பாகிஸ்தான் வீரர்கள் சரியாக விளையாடததால் இந்த தோல்வி நடந்துள்ளது என கூறி வருகின்றனர்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டரில், “இந்திய அணி பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதலை நடத்தி அதிலும் வெற்றி கண்டுள்ளது. அருமையாக விளையாடிய இந்திய அணியினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றியால் பெருமை அடைந்த ஒவ்வொரு இந்தியனும் இதை கொண்டாடி வருகின்றனர்.” என பதிந்தார்.

இது அவரது விசிறிகளுக்கும் மிகவும் மகிழ்வை அளித்துள்ளது. அவருடைய இந்த பதிவை 1,21,000 க்கு மேற்பட்டோர் விரும்பி உள்ளனர்.   அமித்ஷா இவ்வாறு விளையாட்டையும் பிப்ரவரி மாதம் நடந்த பாலகோட் தாக்குதலையும் ஒப்பிட்டு பேசியது பலருக்கு அதிருப்திய அளித்தது.  விளையாட்டை விளையாட்டாக பார்க்கத் தெரியாத அமித் ஷாவின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தான் ராணுவ தளபதி மேஜர் ஆசிஃப் கஃபூர் இது குறித்து தனது டிவிட்டரில், ”அன்புள்ள அமித்ஷா, ஆம். போட்டியில் உங்கள் அணி நன்கு விளையாடி உள்ளது. ஆனால் சம்பந்தமே இல்லாத இரு நிகழ்வுகளை ஒப்பிடுதல் தவறானது. அதைப் போலத்தான் விளையாட்டு போட்டிகளும் தாக்குதல்களும் ஆகும்.

சந்தேகம் இருந்தால் உங்கள் தாக்குதலுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடந்த எங்கள் விமானப்படையின் பதில் தாக்குதலையும் அப்போது இரு இந்திய விமானப்படை விமானங்கள் அழிக்கப்பட்டதையும் நினைத்து ஆச்சரியம் அடையுங்கள்” என் ஆத்திரத்துடன் பதில் அளித்துள்ளார்.

ஆசிஃப் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பின்னூட்டங்கள் இடப்பட்டு அங்கு அறிக்கை போர் நிகழ்ந்து வருகிறது.  விளையாட்டுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் ஒரு போரை அமித்ஷா உருவாக்கி விட்டதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.