சென்னை: விதிகளை மீறியதாக, காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினர் சார்பில், சாலை விதி மீறல்கள், விபத்துக்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அந்த வாகனங்களை திரும்ப பெறுவதில், காவல்துறையினரின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கும், லஞ்ச லாவண்யத்துக்கும் பயப்பட்டு, அதன் உரிமையாளர்களே, வாகனங்களை மீண்டும் பெறுவதில் விருப்பப்படுவது இல்லை. அதுபோல, விபத்தில் சிக்கி சேதமான வாகனங்களை துரதிஷ்டம் எனக்கருதி அதை திருப்பி வாங்க உரிமையாளர்கள் முன் வருவதில்லை/ இதனால் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும், மலைபோல் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் காவல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், காவல்நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்களை அகற்றுவது குறித்த டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதனப்டி, காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தி அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.