சென்னை,
டிடிவி தினகரன் தொடர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, திமுக சார்பாக தொடரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் இன்று காரசார வாதங்கள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, எந்த வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு தெரியும் என்று கூறினார்.
வாதத்தின்போது, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தர விடக்கோரும் வழக்கையும் ஒன்றாகத் தான் விசாரிக்க வேண்டுமா நீதிபதி ரவிச்சந்திர பாபு கேள்வி எழுப்பினார்.
இன்றைய வழக்கின் விசாரணைக்கு டிடிவி தரப்பில் பிரபல சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வியும், சபாநாயகர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு பிரபல வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் ஆஜராக உள்ளனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்ததும். ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி கோரியிருந்தபடி, சபாநாயகர் தனபால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் 500 பக்கங்களை கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக டிடிவி தினகரன் தரப்பு மீது சபாநாயகர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆட்சியை கவிழ்ப்போம் என வெளிப்படையாகவே பேசியதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தை தொடங்கினார்.
அப்போது, ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பாக அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக் கெடுப்பின்போது, ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள், அரசுக்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். அவர்கள்மீது சபாநாயகர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடக்கோரும் வழக்கையும் ஒன்றாகத் தான் விசாரிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார். தகுதி நீக்கமும், நம்பிக்கை வாக்கெடுப்பும் வெவ்வேறான விவகாரங்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதனையடுத்து சபாநாயகர் தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடும்போது, முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கே தொடரப்பட்டது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை வழக்கை தான் முதலில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எம்எம்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்றார்.
‘இதனையடுத்து பேசிய நீதிபதி, எந்த வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என்றார். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.