ஓபிஎஸ் அணிமீது நடவடிக்கை: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

 

சென்னை:

திமுகவில் இருந்து ஓபிஎஸ் தனியாக பிரிந்ததும், சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

இந்த விசயத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் வரும் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

தற்போது டிடிவி தினகரன் தரப்பினர் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஓபிஎஸ் அணியினர் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி தாவல் தடை சட்டப்படி தற்போது 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால், ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்எல்ஏக்கள் மீது 6 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று சக்கரபாணி குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இதுகுறித்து வரும் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Madras HC issues notice to TN speaker asking why no action was taken when 12 OPS faction MLAs had defied party whip on confidence motion