பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவர்கள் பள்ளிக்கு செல் போன் கொண்டுவருவது தடை செய்யப்பட்ட போதும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் கர்நாடக மாநில ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி அஸோஸியேஷன் சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு பள்ளிகளில் இன்று ஆய்வு நடத்தினர்.

மொபைல் போன் இருக்கிறதா என்பதற்காக 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின் பைகளை சோதனை செய்ததில் பல பள்ளிகளில் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மாணவர்களின் பைகளில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் தவிர மாணவர்களின் தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது.

பி.யூ.சி. கூட செல்லாத பள்ளி மாணவர்கள் பைகளில் கருத்தடை சாதனங்களை கண்ட அதிகாரிகள் பெற்றோரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் சில பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பத்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு மனநல ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை பட்டிதொட்டி எங்கும் உள்ள பல்வேறு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அனைவர் கையிலும் செல்போன் தவழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களே அத்துமீறிய சம்பவங்களும் அரங்கேறியது.

ஆன்லைன் என்ற பெயரில் கல்வியில் மொபைல் போன் நுழைந்ததைத் தொடர்ந்து கடந்த காலங்களை ஒப்பிடும் போது மாணவர்கள் அழிவுப் பாதையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பது தரவுகள் மூலம் தெரிகிறது.

ஆபாச படங்கள் மட்டுமன்றி, ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு விபரீதங்களில் சிக்கி தங்கள் எதிர்காலத்தையும் உயிரையும் இழந்தபோதும் மாணவர்கள் மற்றும் எதிர்கால இந்தியாவின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் பகட்டுப் பதவியில் உட்கார்ந்துகொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கான சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவதும் மாணவர்கள் சீரழிய காரணம் என்று பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

குழந்தைகள் வழிதவறிச் செல்கின்றனர். மொபைல் போன்களின் பயன்பாடு குழந்தைகளிடையே ஒழுக்கக்கேடான எண்ணங்களின் மீதான நாட்டத்தை அதிகரித்துள்ளது. தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தற்போது பெற்றோர்களிடம் மட்டுமே உள்ளது. நாட்டின் எந்த ஒரு கட்டமைப்பும் பெற்றோருக்கு துணை நிற்கப் போவதில்லை. பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்பது பெங்களூரு பள்ளி சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

அதனால், கறிக்குதவாத ஏட்டுக்கல்வியையும் திசை மாற்றும் டிஜிட்டல் கல்வியையும் விடுத்து சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஒரு நல்ல கல்வி திட்டத்தையே நாடு விரும்புவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.