அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர்  மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்குகிறது.

182 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 1ந்தேதி 89 தொகுதிகளிலும்,  2வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் டிசம்பர் 5ந்தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறுகிறது. குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 89 தொகுதிகளில்  நாளை (1-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும்  இடங்களில் தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்கள் அடங்கும். இந்த பகுதிகளில் கடுமையான பிரசாரங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது.  கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்றது. குஜராத் தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில்,  பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் போட்டியிட்ட நிலையில்,   சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் கடைசி நாளில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதுமட்டுமின்றி  மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் மாநில கட்சிகளான,  பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.  இவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில்,  339 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தமாக இந்த 89 தொகுதிகளில், மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர்.  இவர்களில் 70 பேர் பெண் வேட்பாளர்கள்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் குஜராத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400. இதில்  முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.  இவர்களில் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், பொதுமக்களின் வசதிக்காக  25, 434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,  34ஆயிரத்து 324 வாக்குப்பதிவு எந்திரங் கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38 ஆயிரத்து 749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாக்கு பதிவானது காலை 8மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடைகிறது.

வாக்குச்சாவடி பணியில், 27ஆயிரத்து 978 தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகள், 78 ஆயிரத்து 985 வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 288 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நாளை வாக்குப்பதிவையொட்டி, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.   பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுகிறார்கள். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன.