கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

Must read

சென்னை:
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முந்தைய கட்டுபாடுகளே தொடரும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாவட்டங்களில் பிஎம்சி எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், ஜூன் 15 முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான காலத்தில் மின்கணக்கீடு செய்ய வேண்டிய மின்நுகர்வோர்கள், 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே உத்தேச கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நுகர்வோர்கள் அல்லது கணக்கீடு இல்லாதவர்கள் அல்லது ஜூன் (2019) மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவர்கள் ஏப்ரல் மாதத்துக்கான (2021) கணக்கீட்டுப்படி உத்தேச மின் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், ஜூன் 2021க்கான உத்தேச கட்டணம் ஆகஸ்ட் 2021ல் முறைப்படுத்தப்படும் எனவும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More articles

Latest article