சென்னை:

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீட்டால் பெரிது படுத்தப்பட்டு வந்த நிலையில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். இதனையடுத்து, இன்று முதல் மெட்ரோ ரயில்சேவை வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தியதாக  ஊழியர்களை சிலரை நிர்வாகம் பணி நீக்கம் செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்  3-வது நாளாக பயணிகள் அவதியடைந்து வந்தனர்.

இதையடுத்து, தமிழக தொழிலாளர் துறை  மெட்ரோ நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்துகடந்த 2 நாட்களாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியது.

நேற்றும்  சென்னை குறளகத்தில் உள்ள  தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,  மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். அதைத்தொடர்ந்து இன்றுமுதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.