கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் விதிகளை மீறி பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

வரும் 4 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி கோவை மாநகர பகுதியில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க காவல்துறையும் மாவட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உரிமம் அளிக்கப்படுகிறது.  கடைகள் அமைக்கும் இடங்களைத் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்தி தடையில்லா சான்று அளித்த பிறகு உரிமம் அளிக்கப்படுகிறது.

அரசு விபத்துக்களைத் தவிர்க்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதன்படி கடைகள் 270 சதுர அடிக்குள் இருக்க வேண்டும்,  திருமண மண்டபங்களில் கடைகள் அமைக்கக் கூடாது.  கடைகள் இடையே 30 அடி வழித்தடம் இருக்க வேண்டும்.  அந்த பகுதியில் உள்ள மாடிகளில் வீடுகள் இருக்கக்கூடாது என்பவை முக்கியமானவை ஆகும்.  இதை மீறி கோவையில் பட்டாசுக் கடைகள் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

திருமண மண்டபங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் பெற்று மண்டபத்தில் கடைகள் அமைக்கப்படுவதாகப் புகார்களில் கூறப்பட்டுள்ளது.   இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை கண்டு கொள்வதில்லை எனவும் சொல்லப்படுகிறது.    இவ்வாறு ஒரே இடத்தில் ஏராளமான பட்டாசுக்கடைகள் அமைப்பதால் விபத்து நேரிடும் போது பாதிப்பு அதிக அளவில் இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை தீயணைப்புத் துறை மறுத்துள்ளது.   மாவட்டத்தில் உரிய விதிகளைப் பின்பற்றி உரிமம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் திருமண மண்டபங்களில் கடைகள் அமைக்க அனுமதிக்கவில்லை எனவும்தீயனஈப்புத் துறை தெரிவித்துள்ளது.    மேலும் விதிகளை மீறி பட்டாசுக்கடைகள் அமைத்தால் அவ்வாறு அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.